Sunday, May 27, 2018

Thoughts

மரணத்திற்கு உலகம் முழுக்க ஒரே வாசனை தான். புகைப்படங்களையும், நினைவுகளையும் தூர எறிந்து விட்டதாய் யாரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம் நாம்?
இரவின் பசியில், பயங்களின் குறுகுறுப்பில், தனிமையின் நிராகரிப்பில், குற்றவுணர்ச்சியின் சடசடப்புகளில், இறந்தவர்கள் திரும்ப திரும்ப பிறந்து கொண்டே இருக்கிறார்கள்; இறந்து கொண்டும்.

****************************************************************************************

ஒரே திசையில் என்றாலும் ஏதோ ஒரு கணத்தில் கைகளைப் பிரித்து கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது. 

****************************************************************************************

பூட்டிய கடை - காத்திருப்பின் போக்கில் கடப்பவர் எல்லாம் கடைக்காரர்.

****************************************************************************************

ஒரு சோகம் அழ வைக்கும் அளவுக்கு ஒரு சிரிப்பு மகிழ்விப்பதில்லை. 
(Knowing the difference between the cause and the effect.)

****************************************************************************************
தூது
அழகி அன்னம் ஆடும் விறலி
உயர்ப்பின் சாலி உணர்வின் தமிழ்
உரைக்கும் நெஞ்சம் ஓடும் நவ்வி
குரைக்கும் பணம் கொஞ்சும் கோகிலம்
புகைக்கும் இலை புனையும் பூவை
பொசியும் முகில் பூவுடை வண்டு
மலயமாருதம் மயக்கும் மஞ்ஞை
மலாகை மங்கலை கீச்சுக் கிள்ளை

இலக்கியக் காதலை இயம்பும் இத்தூதொடு
இணையும் இக்காலம், இணைய எக்காளம்;
முகநூலின் வரிகளும் கைபேசியின் கனைப்புகளுமாய்.
ஊடறுத்துச் செல்லும்
பாதையில்
தொலைகிறது
நதி.
***************************

என்னுள் ஒதுங்கி
எங்கோ பதுங்கி
என்னைத் தேடும்
நான்.
*********************

நான் மட்டுமே நான்
என்றுணர்ந்த
இன்னுமொரு
தருணத்தில்
என்னோடு
நான் மட்டும்.
************************
ஏன் தூக்கம்
நெருங்க மறுக்கிறது
உன்னைப் போல?

ஏன் இரவு
விலக மருகுகிறது
என்னைப் போல?
ஊழிக்காற்று

இளந்தளிர் விழுந்த 
இடத்தில் விழுகிறது
இன்னொரு
முதிர்ந்த இலை.

இருண்ட மேகங்கள்
புதைகின்றன
இடம் காலம்
கவிதை காதல்
நான் நீ.

இப்போது தொலைந்தது
நீயா? நானா?
இரவா? பகலா?
இடமா? பொழுதா?
எல்லாம் பழுதா?
இருண்ட மேகங்கள்,
ஊழியின் காற்று.

உதிரும் இலைகள்
மேகத்தினின்று சிறுதுளிகள்
சிரிக்கும் காற்று.
இளம்பச்சை
இலைக்கண்ணாடியூடே
ஏழு மணிச் சூரியன்.
#எத்தனை அழகானது வாழ்க்கை!

கோவில் தூண்
மஞ்சள் விளக்கு
மாலை வெயில்
மெலிய நிழல்மேல் விழுகிறது
வலுத்த நிழல்.

நிழல் மீதே
நிற்கிறது
தூண்
#காதல் #கடவுள் #கம்யூனிஸம்.

திரும்பத்
திரும்பப்
பெற்றும்
சகிப்பதும்
சுகிப்பதும்
#அன்பு #வாஞ்சை

வகுப்பறை
வெள்ளைப் பலகை
நீலக் கண்ணாடி
சாம்பல் புறா
#எதைப் பார்க்க?
நான் சொன்னவை அவளுக்கும்
அவள் சொன்னவை எனக்கும்
நன்கு புரிந்தன.
இடையில்,
வார்த்தைகள்தாம் பாவம்,
குழம்பித் தவித்தன!
😛😉