Monday, September 2, 2013

தமிழ் வாழ்க!



வெங்கனலில் தங்கமென இலங்குமொழி
சிங்கமென வீரங் கொண்ட வேந்தர்
வங்கமெனும் ஏரி நீந்தும் நாவாய் கொண்டு
எங்கும் கொடி நாட்டி வந்த வீரர் கூட்டம்!

சங்கத்தமிழ் புலவர்; சங்கனையச் சிற்பம்
மங்காதப் புகழ்; மனமகிழக் கூத்து
சங்கடந் தீர்க்கும் விருந்தோம்பல்- உலகைப்
பங்கு கேட்ட உரமிக்க தோள்கள்!

இங்ஙனம் யாவும் பெற்ற என் தமிழே- நீ
யாங்கணும் என்றும் வாழிய நின்று!

புதியதோர் உலகம்?


இயற்கையை இரசிப்பதை நிறுத்தி
கட்டடக் காடுகளைக் கண்டு களித்தேன்!
இருப்பதை இரசிப்பதே இயற்கை அன்றோ?

இயந்திரங்கள், வாகனங்கள்,
இரண்டொரு பறவைகள்,
இவற்றோடு குப்பை
இதற்கிடையே சாலை!

விண்தொடும் பதாகைகள்,
வேடமிடும் நாகரிகம்,
கண்கவர் முகமூடியில் 
கயமை சுமக்கும் மக்கள்!

வேகத்திற்கு விற்கப்பட்ட மனிதர்கள்,
வேதனையில் மூச்சுவிடும் மரங்கள்!
தாகத்திற்கு நீரும் காசாக
தரிசானது மனதுடன் மண்ணும்!

வழுக்கை விழுந்த மலைகள்,
வாழ்க்கை தொலைத்த விலங்குகள்!
“வறண்டு போனது கண்ணீரும்,”
வருத்தம் சொல்லும் வானம்!

இருந்த மலர்க்காட்டை
இரக்கமின்றி அழித்துவிட்டு
இரண்டொரு மலர்க்கொடியில்
இதம் தேடும் இழிவு!

இதுவா புது உலகம்?
இதையா எதிர்பார்த்தோம்?
மாற்றம் நிலை என்பதால்,
மனிதனும் மாறலாம் மனிதனாய்!
எதிர்பார்ப்போம்...

Sunday, September 1, 2013

கடவுளின் கடைசிமூச்சு!


அடிநாள் தொட்டு அவனியின் தந்தை
     அவனெனக் கூறிய ஆக்கங்கள் அழிய,
விடிவான் வெள்ளிபோல் விஞ்ஞானம் விடைபகர,
     விழுதாய் தாங்கிநின்ற பொய்மையெலாம் அடிசாய,

சாத்திரங்கள் நாட்டி வைத்த அடிமைமுறைச் சாக,
     சாதிமதச் சார்புகள் சவக்குழிக்குப் போக,
ஏழ்மை நிலையெல்லாம் எழுத்தல்ல எனஉணர,
     ‘இன்று நாள் எப்படி’கள் இறப்பைத் தேட,

வசிப்பதாய்ச் சொன்ன வான்நோக்கி மனிதன்வர,
     வரமெனச் சொன்னதை வலுவிலா அவன்செய்ய,
கருணைகொண்ட சுற்றாடல் சட்டென கழுத்துநெரிக்க,
     கடைசிமூச்சு விட்டு கடவுள் செத்துப்போனார்!