Monday, September 2, 2013

புதியதோர் உலகம்?


இயற்கையை இரசிப்பதை நிறுத்தி
கட்டடக் காடுகளைக் கண்டு களித்தேன்!
இருப்பதை இரசிப்பதே இயற்கை அன்றோ?

இயந்திரங்கள், வாகனங்கள்,
இரண்டொரு பறவைகள்,
இவற்றோடு குப்பை
இதற்கிடையே சாலை!

விண்தொடும் பதாகைகள்,
வேடமிடும் நாகரிகம்,
கண்கவர் முகமூடியில் 
கயமை சுமக்கும் மக்கள்!

வேகத்திற்கு விற்கப்பட்ட மனிதர்கள்,
வேதனையில் மூச்சுவிடும் மரங்கள்!
தாகத்திற்கு நீரும் காசாக
தரிசானது மனதுடன் மண்ணும்!

வழுக்கை விழுந்த மலைகள்,
வாழ்க்கை தொலைத்த விலங்குகள்!
“வறண்டு போனது கண்ணீரும்,”
வருத்தம் சொல்லும் வானம்!

இருந்த மலர்க்காட்டை
இரக்கமின்றி அழித்துவிட்டு
இரண்டொரு மலர்க்கொடியில்
இதம் தேடும் இழிவு!

இதுவா புது உலகம்?
இதையா எதிர்பார்த்தோம்?
மாற்றம் நிலை என்பதால்,
மனிதனும் மாறலாம் மனிதனாய்!
எதிர்பார்ப்போம்...

No comments:

Post a Comment