Sunday, May 27, 2018

இரவின் விழிப்பில்
பேசியதால் இறக்கும் கவலைகள்
பகலின் பசியில்
உயிர் கொள்கின்றன.

விண்மீன்களை எண்ணிவிட்டேன்.
#மிச்ச இரவை என்ன செய்ய?

பேசாத வார்த்தைகளைப் போல் கனமானவை இரவுகள்.

இரவு இருளுடைத்து என்று யார் சொன்னது?

பைத்தியக்காரனின் பகல் போன்றது மொட்டைமாடி இரவு.

பேசாப் பொழுதுகளை எண்ணி ஏங்கி
பேசி தீர்கிறது பொழுது.

குளிர்கிறதா? எரிகிறதா?
போர்வையா? புகையா?
#நிலவும் மேகங்கள் சிலவும்
வேகச் சாலையை 
மெல்லக்  கடக்கிறது
காக்கை.
#காக்கை பிழைத்தால்  கவிதை செத்துவிடும்
கவிதை பிழைத்தால் காக்கை  செத்துவிடும்


#The court is adjourned.
முந்தாநேத்து செத்துப் போன
நடுத்தர வயசுக்காரனுக்குக்
கண்ணீர் அஞ்சலி போஸ்டர்
வழி போற வயசானவருடைய
சுருதி சேராத பிச்சைக்காரப் பாட்டு
என்ன  எழவுக்குடா வாழ்க்கை?
வேலைக்காரிகள் இல்லாத வீடுகள்
அழுக்கு நிரம்பியவை என்பதாலும்,
கழுவப்படாத தேநீர்க் கோப்பைகளும்
காலர் கறை போகாத சட்டைகளும்
வாசமற்ற குழம்பில் மிதக்கும்
தீய்ந்த மிளகாய்களும்
மற்றவர்முன் தோதாய் இராது என்பதாலும்,
எஜமானர்கள் வேலைக்காரிகளை நேசிக்கிறார்கள்.

புடவை, மூக்குத்தி, மோதிரம்,
வளையல், கொலுசு, ஆரம்,
பூ, பூங்கா, திரையரங்கம்
இவைகள் மட்டுமே
வேலைக்காரிகளுக்குப் பிடிக்குமென்பது
எஜமானர்கள் கண்டுபிடித்த முடிவு.

விழி மலர்த்துமுன்
புது வேலைக்காரிகளின்
நியமன உத்தரவை
எஜமானர்கள் சார்பில்
வாசிக்கிறார்கள்,
முதிர்ந்த வேலைக்காரிகள்.

வெளியாள் முன்
தலைகீழாய்ப் பேப்பர் படிக்கும் நரைத்த வேலைக்காரிக்கும்,
வெளிநாட்டில் படிப்பேன் என்று
தனக்கே கேளாக் குரலில் முனகும் புதிய வேலைக்காரிக்கும்
வயது மட்டும்தான் வித்தியாசம்.

எனினும்,
வீட்டையே வேலைக்காரிகள் வசம்
ஒப்படைப்பதாய்ச் சொல்வதால்
எஜமானர்கள் குறித்து
வேலைக்காரிகளுக்கு நிரம்பப் பெருமை!
எஜமானர்களின் பிரியம் கண்டு
வீடுகளும் வேலைக்காரிகளும்
வேறிடம் போவதில்லை.

வீட்டில் இருந்து தப்பித்த
ஏதோ ஒரு வேலைக்காரி
பைத்தியப் பொழுதொன்றில்
சிறகுகள் முளைக்கும் என்றெண்ணி
பள்ளத்தாக்கில் குதித்துச் செத்துப் போனாள்.

"பையன் பொண்ணு கல்யாணத்த
முடிக்காமப் பாதியிலே போயிட்டா",
"பூவும் பொட்டுமாப் போயிட்டா",
"தலைகுனிய வெச்சுட்டா பாரு" என்று
அரைபோதையில் பிதற்றி
அடுத்தவளை அழைத்தது பள்ளத்தாக்கு.

சற்றே தள்ளியிருந்த
சமவெளிக்கான பாதையின்முன்
"எஜமானர்களுக்கு மட்டும்"
என்னும் பலகை தொங்கியது.
மழைநாளின் ஈரம் போல்,
கண்ணாடிக்கு அப்பக்கம்
ஊர்கிறது
காலம்.

08/09/2017
07:30 PM

Friday, October 18, 2013

சிக்கலின் எதிர்விகிதம் பிரிவு (பிரிவுα1/சிக்கல்)


வம்பு, வசவு, களிப்பு, கண்ணீர்,
வாய்ச் சண்டை, வலுச் சண்டை
வரவேற்க வரவைத்த போலி புன்னகை,
தரங்கெட்ட மனிதர், தவறான சேர்க்கை,

தொலைவின் எதிர்விகிதம் தொல்லை, சிக்கல்கள்,
விலைபோகும் நன்றிகள், விலைகேட்கும் உதவிகள்,
வேண்டாத பேச்சுகள், வேதனைபெரு மூச்சுகள்,
காண்கின்ற கண்களை ஏமாற்றும் கானல்கள்,

பரிவு வேண்டினால் பரிகசிக்கும் உலகு-நம்
சரிவு வருமிடத்து மகிழும் உள்ளங்கள்,
பிரிவு நம்மை இவற்றில் பிரிப்பதால்,
பிரிவு கள்கூட பிரியத்துக் குரியவை!!

Monday, September 2, 2013

தமிழ் வாழ்க!



வெங்கனலில் தங்கமென இலங்குமொழி
சிங்கமென வீரங் கொண்ட வேந்தர்
வங்கமெனும் ஏரி நீந்தும் நாவாய் கொண்டு
எங்கும் கொடி நாட்டி வந்த வீரர் கூட்டம்!

சங்கத்தமிழ் புலவர்; சங்கனையச் சிற்பம்
மங்காதப் புகழ்; மனமகிழக் கூத்து
சங்கடந் தீர்க்கும் விருந்தோம்பல்- உலகைப்
பங்கு கேட்ட உரமிக்க தோள்கள்!

இங்ஙனம் யாவும் பெற்ற என் தமிழே- நீ
யாங்கணும் என்றும் வாழிய நின்று!