Friday, August 30, 2013

வேகப்பயணம்(?!)


வேகப் பயணமோ? – தீயினில்
வேகப் பயணமோ? - நொடியினில்
சாகப் பயணமோ? – உறவுகள்விட்டு
போகப் பயணமோ?

மோகம் போகுமோ? – வேகத்தின்
தாகம் போகுமோ?- மரணத்தின்
இராகம் சாகுமோ? – மனிதத்தின்
பாகம் சாகுமோ?

தேகம் வாழவோ – உற்றாரின்
சோகம் சாகவோ – உங்கள்
வேகம் கொல்லுங்கள் – நெடுநாள்
வாழ்ந்துச் செல்லுங்கள்!

Thursday, August 29, 2013

சில தாக்கங்கள்


ஆறாகக் கண்கள், ஆறாதப் புண்கள்,
தீராத வலியோடு தீனமாக அலறும் நினைவு!
தொட்டிலைத் துறக்க மறுத்த மனம்
விட்டிலை போல் வீட்டைச் சுற்ற,

விடியலில் விழிக்கையில் வெருட்டி நின்ற
கொடிதானப் பள்ளியும் சடுதியில் பழகிப்போக,
அடிநாள் வசந்தத்தின் மலரான நட்பு வாட,
“அன்பால் பிரியாமல் ஊழிவரை உற்றிருப்போம்”,
என்பதாய்ச் சொன்ன இறைநட்பு இறந்துபோக,

இடைவேளை மறந்துபோன மரணங்கள் மரத்துப்போக
இடையறாது கலந்துகொண்ட போட்டிகளும் இயல்பாய்மாற
விடைதெரியா வினாக்களோடு வாழ்வெனும் வினாத்தாளில்
விசும்பலாய் நின்றன இவற்றின் தாக்கங்கள் மட்டும்!!

Tuesday, August 27, 2013

ஐம்பூதங்கள்


பரிசாய் இயற்கைதந்த பசுமை நிலமெல்லாம்
தரிசாய் தரமிழந்து பணமுதலைகள் பாற்பட்டு,
கட்டடக் காடுகளாய், கண்கவர் மாளிகையாய்
சட்டத்தின் கல்லறையில் உருக்குலைந்து உடன்புதைய,

மாந்தனின் கொடுமைகண்டு வண்ணக்கண்ணீர் வடித்தது,
வேந்தனின் சினம்போல் வெள்ளமாய்ஓடிய மாஜிஆறு!
பேதைஉலக மதைச் சாய மெனக்கூற- உப்புகரித்தது நீர்
கடல்நீர் உள்ளீட்டால்அல்ல; அந்த மலைமகளின் கண்ணீரால்!

கரியமிலம், கந்தகம் கக்கும் தொழிலகங்கள்
சரியாக அவற்றையே திரும்பத் துப்பும்வாகனங்கள்;
வெருட்டும் அவற்றின் அரக்கப் பார்வையில்
சுருண்டு விழுந்து மூர்ச்சித்தது காற்று!

உயர்மரம் என்னும் உறவினர் இறக்க
ஊடல் கொண்டது வானிடம் மேகம்!
நிறத்தை மாற்றும் மனிதர் சேர்க்கையால்
அனாதை ஆனது அகண்ட வானமும்!



நன்மை பயக்கும் தொழிலினை விடுத்து,
நானிலந் தன்னை தீய்த்தது நெருப்பு!
தீய மனிதரின் தீக்குணம் கண்டு
தீயும் அஞ்சி வெந்து மாண்டது!

மனிதத்தை வாழ்விக்க வந்த பூதங்கள்
மனிதனால் நசிந்து மரணத்தை எதிர்நோக்க,
பதவிக்கு வந்தன- கையூட்டு, ஊழல்,
கவலை, வேலையின்மை, பொய்மை என
பழமையில் புழுத்த புதியஐம் பூதங்கள்!

Tuesday, August 20, 2013

ஊடகங்களில் தமிழ்



“விடுதலை வெல்லும் எம்தமிழ்”, என்று
விளம்பி நின்றது ஊடகம் அன்று!
பாமரத் தமிழில் பத்திரிகை செய்திகூற,
பாரிலுள்ள நூலெல்லாம் பைந்தமிழில் மொழிமாற,
நாளேடு, நூலோடு வானொலியும் தமிழ்வளர்க்க,
நயவஞ்சக வடவர்மொழி நம்மொழிக்கு தீதென்று
திறமிகு பணிசெய்து தனித்தமிழ் வேண்டிநின்ற
திராவிடத்தால் திரையிலும் திளைத்தது தமிழ்!

மேற்கின் மேகங்கள் பெருமழை பொழிய,
மெல்லத் தமிழ்பயிர் வெள்ளத்தில் அழிய,
அற்றம் தருகின்ற ஆங்கிலம் சுமந்து
அறிவிப் பாளர்கள்அலை வரிசையை அணிசெய்ய,
குற்றுயிராக்கிப் பின்முதுகில் குத்தினாற் போல்
போட்டியிட்டு தமிழ்கொன்று, போதகர் போல்நின்று
போட்டிகள் வைப்பர், தனித்தமிழ் பேச்சுக்கென்று!
கண்ணுறக் கூடா இக்கடிதான காட்சிகண்டு
கண்மூடி இறக்கும் கன்னித்தமிழ்- அதனைக்
காண்போம் நேரலையாய் தொலைக்காட்சி யினில்!


இத்தனை இழிவுகள் இல்லாமற் செய்ய- கடு
கத்தனை அளவு முயற்சிகள் போதும்!
எத்தனை முயன்றும் தனித்தமிழ் செய்வோம்- நம்
இன்னுயிர் தந்தும் நம்மொழி காப்போம்!
மக்களை விழுங்கும் ஊடகம் உடைத்து,
மக்களுக்கான ஊடகம் சமைப்போம்- தமிழ்
மக்களுக்கான புது ஊடகம் படைப்போம்!