“விடுதலை வெல்லும்
எம்தமிழ்”, என்று
விளம்பி நின்றது
ஊடகம் அன்று!
பாமரத் தமிழில்
பத்திரிகை செய்திகூற,
பாரிலுள்ள
நூலெல்லாம் பைந்தமிழில் மொழிமாற,
நாளேடு, நூலோடு
வானொலியும் தமிழ்வளர்க்க,
நயவஞ்சக வடவர்மொழி
நம்மொழிக்கு தீதென்று
திறமிகு பணிசெய்து
தனித்தமிழ் வேண்டிநின்ற
திராவிடத்தால்
திரையிலும் திளைத்தது தமிழ்!
மேற்கின் மேகங்கள்
பெருமழை பொழிய,
மெல்லத் தமிழ்பயிர்
வெள்ளத்தில் அழிய,
அற்றம் தருகின்ற
ஆங்கிலம் சுமந்து
அறிவிப்
பாளர்கள்அலை வரிசையை அணிசெய்ய,
குற்றுயிராக்கிப்
பின்முதுகில் குத்தினாற் போல்
போட்டியிட்டு
தமிழ்கொன்று, போதகர் போல்நின்று
போட்டிகள் வைப்பர்,
தனித்தமிழ் பேச்சுக்கென்று!
கண்ணுறக் கூடா
இக்கடிதான காட்சிகண்டு
கண்மூடி இறக்கும்
கன்னித்தமிழ்- அதனைக்
காண்போம் நேரலையாய்
தொலைக்காட்சி யினில்!
இத்தனை இழிவுகள்
இல்லாமற் செய்ய- கடு
கத்தனை அளவு முயற்சிகள்
போதும்!
எத்தனை முயன்றும்
தனித்தமிழ் செய்வோம்- நம்
இன்னுயிர் தந்தும்
நம்மொழி காப்போம்!
மக்களை விழுங்கும்
ஊடகம் உடைத்து,
மக்களுக்கான ஊடகம்
சமைப்போம்- தமிழ்
மக்களுக்கான புது
ஊடகம் படைப்போம்!
No comments:
Post a Comment