பரிசாய் இயற்கைதந்த பசுமை நிலமெல்லாம்
தரிசாய் தரமிழந்து
பணமுதலைகள் பாற்பட்டு,
கட்டடக் காடுகளாய்,
கண்கவர் மாளிகையாய்
சட்டத்தின்
கல்லறையில் உருக்குலைந்து உடன்புதைய,
மாந்தனின்
கொடுமைகண்டு வண்ணக்கண்ணீர் வடித்தது,
வேந்தனின்
சினம்போல் வெள்ளமாய்ஓடிய மாஜிஆறு!
பேதைஉலக மதைச் சாய
மெனக்கூற- உப்புகரித்தது நீர்
கடல்நீர்
உள்ளீட்டால்அல்ல; அந்த மலைமகளின் கண்ணீரால்!
கரியமிலம், கந்தகம்
கக்கும் தொழிலகங்கள்
சரியாக அவற்றையே
திரும்பத் துப்பும்வாகனங்கள்;
வெருட்டும்
அவற்றின் அரக்கப் பார்வையில்
சுருண்டு விழுந்து
மூர்ச்சித்தது காற்று!
உயர்மரம் என்னும்
உறவினர் இறக்க
ஊடல் கொண்டது
வானிடம் மேகம்!
நிறத்தை மாற்றும்
மனிதர் சேர்க்கையால்
அனாதை ஆனது அகண்ட
வானமும்!
நன்மை பயக்கும்
தொழிலினை விடுத்து,
நானிலந் தன்னை
தீய்த்தது நெருப்பு!
தீய மனிதரின்
தீக்குணம் கண்டு
தீயும் அஞ்சி
வெந்து மாண்டது!
மனிதத்தை வாழ்விக்க
வந்த பூதங்கள்
மனிதனால் நசிந்து
மரணத்தை எதிர்நோக்க,
பதவிக்கு வந்தன-
கையூட்டு, ஊழல்,
கவலை, வேலையின்மை,
பொய்மை என
பழமையில் புழுத்த
புதியஐம் பூதங்கள்!
No comments:
Post a Comment